
வாலிப வயதில் எல்லோர்க்கும்: கண்ணிமைகள் சாமரம் வீசும் காற்றில் கற்பனைகள் சிறகடிக்கும், எண்ணங்கள் பறந்து பறந்து கானம் வாசிக்க வானம் தேடும். பூமியைப் பூப்பந்தாட தத்தித்தாவிடும் மனம்: இமயம் சென்று இறுகக் கண்மூடி உறங்க நினைக்கும். உல்லாசம் தேடி உலகெல்லாம் சிந்தனைச் சிதறல்கள் சிதறிப் பறக்கும்.
உல்லாசம் எல்லையை மீறித் தொல்லைகளை உள்வாங்கும்.
உல்லாசத்தை அதிகம் விரும்புபவர்கள் அதன் ஆளுகைக்கு உட்பட்டு, அவர்களின் ஆளுமைத் திறனில் பெரிதும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்துகின்றார்கள். இந்த மாற்றங்கள் பொதுவாக சமுதாய நலனையும், சமூகத்தின் உட்கட்டுமானத்தையும் சிதைத்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் உலகியல் வாழ்விலும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவர்களில் இளைஞர்கள் மட்டுமல்ல, யுவதிகளும் உட்படுகின்றார்கள்.
இவர்கள் கீழ் காணும் இயல்புகளைக் கொண்டிருப்பர்:
• நிரந்தரமான நட்புப்புற நிலையில் இருந்து தவறுதல்
• மற்றவர்களின் உணர்வுகளை உணர முடியாத நிலை
• திறனாய்வின்றிய செயற்பாடுகள்
• விரக்தியை சகிக்க முடியாமை
• வன்முறைகளின் மீதான ஈர்வை
• குற்ற உணர்வின்மை
• அனுபவத்திலிருந்து கற்குமாற்றலின்மை
• உணர்வுகள் உறைந்த நிலை
• ஆக ஆராய்வுத்தன்மை
• உல்லாசம் தேடல்
• பற்றற்ற நிலை
• ஆரோக்கியமின்றி இலகுவில் கூட்டுச் சேரும் இயல்பு என்பன ஏற்படும்
பொதுவாக இவர்களில் அநேகர் எவரிடமும் அதிகமாக ஆழமான நட்பை அல்லது விசுவாசத்தைத் கொண்டிருப்பது அரிது. நண்பர்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதம், எந்தவித இலக்குமில்லாது அல்லது குறுகிய நோக்கில் கூட்டம் சேரும் தன்மையையும் கொண்டிருப்பர். தங்களது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக எவருடனும் நட்புக்கொள்வதாகவும், மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியாமையும் ஏற்படுகிறது.
மற்றும் இவர்கள் எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமலும், விரக்திகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து மீள முடியாது, மேலும் மேலும் படுகுழியில் வீழ்வதாக மதுவை நாடுவதாகவும் அமையும். அத்துடன், வன்முறைகளுக்கு மது வடிகாலமைப்பதாகவும் காணப்படுகிறது. இப்படியான ஒரு விசவட்டம் தொடர ஏதுவாகவும் அமைகிறது.
பொதுவாக ஒரு தவறை மறைக்க அல்லது அதிலிருந்து மீள மேலும் மேலும் தவறுகளைச் செய்து திருப்தி காண்பதால் குற்ற உணர்வுகள் சிறிதும் அற்றதான மனநிலை ஏற்படுகிறது.
இவை மட்டுமல்லாது அனுபவங்களில் இருந்து எதனையும் கற்க முடியாது போவதுடன் உணர்வுகள் உறைந்து போகின்றன.
பொதுவாக உல்லாசத்தை மிக அதிகமாக நேசிக்கும் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், தங்களைப் பற்றி அதிகமாக மனதுள் ஆராய்வதாகவும் இருப்பதால் தமது உறவுகளைப் பற்றி எதையும் புரிய முடியாது போகின்றனர்.
மேலும் இவ்வாறான அதிகமான உல்லாசத்தை விரும்புபவர்கள் எவருடனும் ஆழமான நட்பையோ, காதலையோ அல்லது விசுவாசத்தையோ வைக்கமாட்டார்கள். அத்துடன் இவர்களால் முடியாத காரியமும் அதுவாகத்தான் இருக்கும்.
இவர்களது லௌகீக வாழ்வு அர்ப்பணிப்புகளுடன் செயற்படமுடியாது விரிசலைத்தான் அதிகம் கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment