Pages

Sunday, January 2, 2011

சாதாரண நெஞ்சு வலியுடனும் நீரிழிவு நோயாளிகளில் மாரடைப்பு வரலாம்.

வலியானது உணரப்படும் வகை, கால அளவு, வலியின் பரவுகை என்பவற்றுக்கேற்ப வேறுபடும். இதற்கமைய வலியின் பாரதூரத் தன்மையும் வேறுபடும். நெஞ்சுவலி சுவாசநோய்கள், இரப்பைப் புண், மாரடைப்பு போன்ற நோய் நிலைகளில் ஏற்படலாம். இவை ஒவ்வொன்றின் போதும் ஏற்படும் வலியின் தன்மை இயல்பில் மாறுபட்டதாகக் காணப்படும். இங்கு நாம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய வலி. நெஞ்சை இறுக்குவதைப் போன்ற வலியே ஆகும். இவ்வகையான வலி மாரடைப்பு நோயின் போது பெரிதும் உணரப்படும். எனினும் நீரிழிவு நோயுடையவர்களில் மாரடைப்பு நோய் ஏற்படும் போது நெஞ்சு வலி என்பது பெரிதும் ஏற்படாத நிலை காணப்படலாம்.இதனை அமைதியான மாரடைப்பு. (silent mi) என அழைப்பர். இவ் ஆபத்து நிலை பற்றிய போதியறிவு இன்மையால் நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்படும் மாரடைப்பினால் மரணங்கள் ஈற்று விளைவாகி விடுகின்றன. மாரடைப்பு நோயை விரைவில் இனங்காண்பதும் காலதாமதம் இன்றி அதற்கான சிகிச்சை முறைகளைச் செயற்படுத்துவதுமே அதன் வெற்றியை அல்லது மாரப்படைப்பில் இருந்து மீள்வதற்கான சந்தாப்பத்தை வழங்குகின்றது. இங்கு கால தாமதம் என்பது அதிகரிக்கும் போது சிகிச்சை பலனளிக்காத நிலை ஏற்படுகின்றது. மேலும் உயர் குருதி அமுக்கம், உடல் நிறை அதிகமுள்ளவர்கள் புகை, மதுவால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் குருதியில் கொலஸ்ரோல் கூடியவர்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் அரிதான உடற்செயற்பாடு கொண்ட வாழ்க்கை முறை உடையவர்கள் உடற்பயிற்சியை நாடாதவர்கள், மேலும் வயதெல்லை 45 ஐத் தாண்டிய ஆண்கள், மற்றும் வயதெல்லை 55 ஐத் தாண்டிய பெண்கள் போன்றவர்கள் மாரடைப்பு நோயின் பிடியில் எளிதில் சிக்கிக்கொள்ளக் கூடியவர்கள். இவர்களில் நெஞ்சுவலி ஏற்படும் போது கவனத்துடன் செயற்படும் போது ஆபத்திலிருந்து மீண்டுவிடலாம் மாரடைப்பு நோயானது பொதுவாக நெஞ்சை இறுக்குவது போன்ற ஒரு வலியாகவே உணரப்படும். அதாவது நடு நெஞ்சுப்பகுதியில் அமுக்குவது அல்லது இறுக்குவது போன்றதாக அமையும். மூச்சுவிட சிரம் ஏற்படுவதும் வலியானது இடது தோட்பட்டை, கை, தாடை பகுதிகளில் உணரப்படலாம். வலியானது தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கு மேல் காணப்படுவதோடு மரண பயமும் ஏற்படும். இத்துடன் வியர்த்தல், வயிற்றுவலி, சத்தி, நெஞ்சுப் படபடப்பு, தலைச்சுற்று, மயக்கம், குளிர்நிலை என்பனவும் ஏற்படலாம். இருப்பினும், சலரோக நோயாளிகளில் மாரடைப்பு பெரிதளவில் வலியை ஏற்படுத்தாது இதயப் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் சந்தாப்பங்களே காணப்படுகின்றது. இவர்கள் சிறிதளவு வலியை உணர்வார்களாயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டி உள்ளது. மேற்படி அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சற்றும் தாமதமின்றி மருத்துவ வசதிகள் கூடிய மருத்துவ மனையை நாட வேண்டியது அவசியமாகும். வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயானது நிர்ணயம் செய்யப்படும். இதனை நோய் பற்றிய வரலாறு, மற்றும் சோதனைகளான E.C.G., troponin, T.I என்பவற்றினூடு மேற்கொள்ளப்படும். இவ்வாறு உறுதி செய்யப்பட்ட மாரடைப்பு நோயாளிகளில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் கட்டி களைக் கரைக்க ஊசி மருந்துகள் அல்லது உட்பாய்ச்சுகை கருவியினூடு மருந்துகள் செலுத்தப்படலாம். மருந்தின் தெரிவு நோயின் தன்மை, நோயாளியின் இயலுமை, இதர நோய்கள் என்பவற்றுக்கேற்ப மாறுபடும். இங்கு Streptokinase போன்ற மருந்துகள் நெஞ்சு வலி ஏற்பட்டு குறித்த கால அவகாசத்துடன் வழங்கப்பட வேண்டும். அன்றேல் இவை வழங்குவதால் பயனில்லாத நிலை ஏற்படும். இங்குதான் காலதாமதம் என்ற சொல்லின் அர்த்தம் உணரப்படுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை நோக்கி நகர்வதால் விரைந்து செயற்பட்டு மரணத்தை வெல்வோம். இதயத்தை புத்துயிர் பெறச் செய்வோம்.

டாக்டர். வெ.நாகநாதன்

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator